சிக்கிய "போலி" போலீஸ் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்

0 6807
சிக்கிய "போலி" போலீஸ் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இரிடியம் மோசடி கும்பலைச் சேர்ந்த 3 பேரை கடத்தி, 5 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த, மற்றொரு கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை - கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த மோகன் என்பவர், பழமை வாய்ந்த பொருட்கள் மற்றும் மீன் வலை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வெளிநாட்டிற்கு விற்பனை செய்து வருகிறார். ஆந்திர மாநிலம் காளகஸ்தியைச் சேர்ந்த ரகுமான் என்பவர், சத்தியமங்கலத்தில் இரிடீயம் இருப்பதாக கூறி, ஆசை வார்த்தை கூறியதால், மோகன் தனது கார் ஓட்டுநர் சுரேஷ், கூட்டாளி கொல்கத்தா ஜாய் ஆகியோருடன் கடந்த 7 ஆம் தேதி சத்தியமங்கலம் சென்றதாக சொல்லப்படுகிறது.

குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்த போது, போலீஸ் வேடத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இவர்களை காருடன் கடத்தியதாக கூறப்படுகின்றது. அதே பகுதியில் உள்ள காந்தி நகரில் ஒரு விவசாய தோட்டத்தில் மூவரையுடம் அடைத்து வைத்த கடத்தல் கும்பல், மோகனின் மனைவி வித்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 5 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே கணவரை உயிரோடு விடுவிப்போம் என மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது

கணவரின் உயிருக்கு ஆபத்து நிகழ்ந்து விடக் கூடாது என்பதால் வித்யா, கடத்தல் கும்பல் தர்மபுரி ரமேஷ் என்பவரின் வங்கி கணக்குக்கு 21 லட்சம் ரூபாய் பணத்தை உடனடியாக போட்டு விட்டு, அடுத்த தகவலுக்காக காத்திருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், எந்த தகவலும் வரவில்லை எனக் கூறியுள்ள வித்யா, சத்தியமங்கலத்திற்கு விரைந்து வந்து, காவல் நிலையத்தில் நேரில் புகார் கொடுத்தார்.

களமிறங்கிய காவல்துறையினர், மோகன் உள்பட மூவரையும் பத்திரமாக மீட்டு, கடத்தல் கும்பலிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் ரொக்கம், 3 கார்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், மூவரை கடத்திய 6 பேர் மட்டுமின்றி, அவர்களுக்கு 9 பேர் உதவியதும் தெரியவந்துள்ளது. இந்த 15 பேர் கொண்ட கடத்தல் கும்பலில் 9 பேர் சிக்கி விட, தலைமறைவாக இருக்கும் காளஹஸ்தி ரகுமான், தருமபுரி ரமேஷ் உள்ளிட்ட 6 பேரை, சத்தியமங்கலம் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments